Sunday, November 29, 2009

மது அருந்துதல் -ISLAMIC VIEW

மது அருந்துதல் -ISLAMIC VIEW

மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

தவிர்ந்து கொள்ள கட்டளையிடுவது அது ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மதுவை கூறுவதுடன் இணைவைப்பாளர்களின் சிலை மற்றும் அவர்களின் சூதாட்ட அம்புகளையும் அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். எனவே திருமறையில் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றுதானே வந்துள்ளது. ஹராம் என்று கூறப்படவில்லையே! என்றெல்லாம் கூற எந்த ஆதாரமும் சாத்தியமும் கிடையாது. மது அருந்துவது பற்றி கடுமையாக எச்சரிக்கும் பலநபிமொழிகளும் உள்ளன.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று கேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)

நாம் வாழும் இக்காலகட்டத்தில் மது வகைகளும், போதைப்பொருட்களும் பல்கிப் பெருகிவிட்டன. பீர், ஆல்கஹால் போன்ற எத்தனை எத்தனையோ போதைப் பொருட்கள் அரபியிலும், அந்நிய மொழிகளிலும் பல பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. நபி(ஸல்)அவர்கள் அன்று வர்ணித்த சமுதாயத்தினர் இன்று தோன்றிவிட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தில் சிலர் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அபூதாவூத்)

ஏமாற்றும் விதமாக மதுவுக்கு இன்றியமையாப் பொருள் போல பெயர் சூட்டி அதனை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் அவர்கள் -நயவஞ்சகர்கள்- ஏமாற்றுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத் தாமே தவிர (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. (இறை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:9)

மார்க்கம் மதுவிற்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. போதை பொருட்களின் ஆணி வேரையே கிள்ளி எறிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

மதிமயங்கச் செய்யும், போதையூட்டும் அனைத்தும் -அது குறைவாக இருந்தாலும் சரியே!- ஹராம் ஆகும். அதற்கு எத்தனை மாற்றுப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் போதை என்பதில் அவையனைத்தும் ஒன்றுதான். அவையனைத்தின் சட்டமும் ஒன்றுதான்.

இறுதியாக, மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம் இதோ!
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails