Sunday, November 29, 2009

தோட்டங்களில் வெற்றிலை, புகையிலை, சாராயம்..

தோட்டங்களில் வெற்றிலை, புகையிலை, சாராயம்...

தோட்டங்களில் வெற்றிலை, புகையிலை, சாராயம்...

சங்க - அரசியல் தயவின்றி ஒண்ணுமே பண்ண முடியாது!

புகைத்தல் உடல் நலத்திற்கு கேடாகலாம் என ஒவ்வொரு சிகரட் பக்கட்டிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இருப்பினும் புகை பிடிக்கின்றவர்கள் எத்தனைப் பேர் இதனை வாசிக்கின்றார்கள் என்பது கேள்விக் குறியே!

தோட்டங்களிலுள்ளவர்கள், பீடி, சுருட்டு, சிகரட் போன்றவற்றோடு, வெற்றிலையோடு சுண்ணாம்பையும், புகையிலையையும் சேர்த்து மென்று துப்புகிறார்கள். இவை யாவும் உடல் நலத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்வதில்லை.

இந்த புகைப் பிடித்தல், மதுபாவனையால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை, எத்தனை! இக்குடும்பங்களின் பராமரிப்பில் வாழும் அப்பாவி குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் நோயாளிகள் எனப் பல தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குடிப்பழக்கம் கொண்டவர்கள் தங்களுடைய உடலையும் உள்ளத்தையும் கூட பாதிப்படையச் செய்து ஒரு பைத்தியக்காரனைப் போல் திரிவதைக் காணலாம்.

புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கத்தால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. இவர்களை சுற்று இருக்கின்றவர்கள்தான் மிகவும் அதிகமாகப் பாதிப்படைகின்றார்கள். புகையில் நச்சுத் தன்மையான பதார்த்தங்கள் இருப்பதால் (நிகொட்டின்) இவை உடலுக்குள் சென்று புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு காரணியாகிறது. பல இலட்சக் கணக்கானவர்கள் உலகெங்கும் புகைப்பிடிப்பதால் மரணமடைகின்றனர். ஆனாலும் புகைப்பிடித்தலின் அளவு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை.

தோட்டப் புறங்களிலும் புகைப்பிடித்தல், மதுபாவனை, வெற்றிலை போடுதல் போன்றவற்றால் பலர் பல நோய்களுக்கு உட்படுகின்றனர். மிக அதிகமானோர் மது பாவனையால் ஈரல் கருகி இறக்கின்றார்கள். தோட்டப் புறத்தைச் சுற்றியுள்ள நகரங்களிலே மதுக் கடைகள்தான் அதிகமாக உள்ளன. குறிப்பிட்ட ஒரு சிறிய கடைத் தெருவில் லைசன்ஸ் வழங்கப்பட்ட மது கடைகள் 6 உள்ளன. கிட்டத்தட்ட அரை கி.மீ. தூரத்தில் இதைவிட அனுமதி பெறாத சட்ட விரோத பார்களும் காணப்படுகின்றன. தோட்டங்களில் இருந்து கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக தினமும் வருகின்றவர்களும், வேலை முடிந்து செல்கின்றவர்களும் இங்கு வராமல் போவது இல்லை. எந்நேரமும் மது அருந்துபவர்கள் காலை முதல் மாலை வரை இங்கே சுற்றித் திரிவதைக் காணலாம்.

இரண்டு பேர் சேர்ந்தால் தோட்டங்களில் சாராயம், கள் குடிப்பது சர்வ சாதாரணம். இன்றைய இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் கூட மாலை வேலைகளில் போதையுடன் காண முடிகிறது.

புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் கூறும் காரணங்களைக் கேட்டால் வேடிக்கையாக இருக்கும். ஒன்று, பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, தனிமையைப் போக்குதல், மன அழுத்தம், நண்பர்களின் வற்புறுத்தல், தொடர்ந்து வேலை செய்வதற்கு, மன நிம்மதிக்கு, ஒரு தெம்புக்கு... போன்ற பல்வேறு காரணங்களைக் கூறுவதைக் காணலாம்.

ஆனால், மேற்கூறிய காரணங்கள் எல்லாம் தங்களைத் தானே அழித்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களே என்பதை புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் உணர்வார்களா? இவர்கள் ஒன்றை மட்டும் நிச்சயமாக உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னுடைய குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள், முக்கியமா? புகைபிடிப்பது, மது அருந்துவது முக்கியமா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

தோட்டத்தில் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் வெற்றிலை பாக்கு போடுவதற்கு செலவழிக்கும் தொகையை தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும், குடும்ப முன்னேற்றத்திற்கும் செலவு செய்ய வேண்டும். சாதாரணமாக ஒரு தொழிலாளி தனது சம்பளத்தில் 290/= இல் தினமும் மது, புகைப்பிடித்தல், வெற்றிலை பாக்கு போன்றவற்றிற்கு 100 ரூபா செலவு செய்தால் மாதம் 3000/= ரூபா வருடத்திற்கு 36,000/= அவர் தொடர்ந்து தன் வாழ்க்கையில் 40 வருடங்களுக்கு செலவு செய்தால் 36,000/= x 40 = 1,44,0000/= ஒருவர் செலவு செய்கின்றார். இதையே சேமித்து இருந்தால் தன் குடும்ப முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போதுள்ள வாழ்க்கைச் செலவையே சாமாளிக்க முடியாமல் திண்டாடும் இவர்களால் எவ்வாறு இந்த மேலதிகச் செலவுகளை சமாளிக்க முடியும்? இது வரை காலமும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற முடியாது. வாய் மூடி மெளனிகளாக இருக்கின்ற இம்மக்களால் இந்த தேவையற்ற செலவுகளை தொடர்நது செய்ய முடியாது என்பதை உணர்வார்களாக?

இன்று பிறக்கின்ற பல குழந்தைகள் இரண்டரைக் கிலோவுக்கும் எடை கொண்டவர்களாக உள்ளன. கர்ப்பிணித் தாய்மார்களும் நிறை குறைந்தவர்களாகவும் போதிய போஷாக்கற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம். கருவில் செத்து பிறக்கும் குழந்தை, பிறந்தவுடன் இறக்கும் குழந்தை, 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர் மரண வீதங்கள் எல்லாம் நகரம், கிராமம் மட்டத்தை விட தோட்டப் பகுதியிலேயே மிக அதிகம். இலங்கை புள்ளி விபர திணைக்களத்தின் ஷிழி ளிசிஷி 2006/2007 கணிப்பீடுகளில் இந்த விவரங்கள் காணப்படுகின்றன. இது இவ்வாறு இருக்கும் போது இம்மக்களின் வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் இம்மக்களின் மதுபாவனை, புகைப்பிடித்தல், வெற்றிலை மெல்லல், கசிப்பு பாவனை, போதை தரும் பொருட்களான (பாபுல், பான் பராக், லேகியம்) போன்றவற்றை தங்கள் வாழ்க்கையில் தவிர்க்க வேண்டும்.

இங்கே நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய விஷயம், இவர்களிடம் சந்தா வாங்கும் சங்கங்கள், தோட்ட மக்களின் குடிப்பழக்கத்தைக் குறைப்பதற்கு எவ்வகையிலும் உதவ முன்வருவதில்லை என்பதாகும். உண்மையைச் சொன்னால், இவர்களின் குடிப்பழக்கம் அதிகரிப்பதற்கும், நீடித்து நிலைப்பதற்கும் சங்கங்களே துணை போகின்றன. சங்கங்களில் உத்தியோகம் பார்ப்பவர்கள் அநேகமாக குடிப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். சாராயம் இல்லாமல் சங்கங்களில் எதுவும் ஆவதில்லை. போத்தலைக் காட்டினால் தான் காரியம் ஆகும் என்பதே நடைமுறை சங்க வாக்கு. இப்படிச் செய்ய வேண்டாம்; நடந்து கொள்ள வேண்டாம் என எந்தச் சங்கமும் தமது ஊழியர்களுக்கு உத்தரவு போட்டதாக சரித்திரம் இல்லை.

இது இப்படி இருக்க, அடுத்ததாக சங்க அரசியலை எடுத்துக் கொள்வோம். வாக்கு வேட்டையாட மலையக அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் சாராயம் போத்தலே! சாராயம் புகட்டித்தான் மலையகத்தில் வாக்கு வேட்டை, தேர்தல் பிரசாரம், தேர்தல் சேவைகள் எல்லாம் நடைபெறுகின்றன. வாக்களிக்கச் செல்லும் போது கடை வழியில் சாராயத்தைப் புகட்டி விட்டே, நம்ம சின்னத்தை மறந்திடாதீங்க!’ என்று சொல்லி அனுப்பி வைக்கும் அவலமும் நடைபெறுகிறது. மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல சாராயக் கடைகள் மலையக அரசியல் வாதிகளுக்குச் சொந்தமானவை என்பது பகிரங்க இரகசியம். இது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டும் உள்ளது.

மதுவை ஒழிப்பது ஒருபுறம் இருக்கட்டும். சங்கமும், சுங்க அரசியலும் மதுவை ஒழிக்க விடமாட்டோம் என்றிருக்கும் நிலையில், மது, சிகரெட், வெற்றிலை போன்ற அவசியமற்ற பழக்கங்கள் ஒழிக்கப்படுவது பற்றி பேசுவதால் தான் என்ன பலன்? சங்கத்தையும் சங்க அரசியலையும் ஒழித்தால்தான் தோட்டங்களில் மதுவை ஒழிக்கலாம் என்ற யதார்த்தத்தை யாரிடம் போய்ச் சொல்வது!?

மதுபாவனை குறைந்த பட்சம் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டுமானால், சங்கங்களும், மலையக அரசியல் தலைமைகளும் அதற்கு ஆதரவாக முழுமனதுடன் செயல்பட வேண்டும். இம்மன மாற்றம் நிகழாவிட்டால், என்னத்த சொல்லி... என்னத்த செய்ய...


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails