Thursday, December 10, 2009

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

நெருப்பு வைத்து தன்னை அழித்தவனை
பழிவாங்கியது சிகரெட்
கான்சர் வடிவில்"

என்கிறது ஒரு புதுக்கவிதை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று நன்கு அறிந்திருந்தும், பலர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர். மிகவும் நல்ல மனிதர். நன்கு படித்தவர். பற்பல நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறவர். ஆயினும், எப்படியோ புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டு, அதைக் கைவிட முடியாமல் தவிப்பவர். நான் "ஏன் இப்படிப் பணத்தையும் செலவு செய்து உடம்பையும் கெடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் படித்தவர், புகையின் தீமைகள் உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்பது வழக்கம். "என்ன செய்வது? என் வேலையின் காரணமாக எனக்கு மன அழுத்தமும் இறுக்கமும் அதிகம். புகை பிடிப்பதால் இறுக்கம் தணிகிறது. அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. " என்றெல்லாம் நொண்டிச் சாக்கு சொல்வார் அவர். கடைசியில், தொண்டையில் புற்றுநோய் தாக்கிவிட்டது. சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் போல் இப்பழக்கத்திற்கு என்னென்னமோ காரணம் சொல்லி, கடைசியில் அவதியில் சிக்கிக்கொள்ளும் எத்தனையோ மனிதர்களுக்காகவே இந்தக் கட்டுரை.

cigaretteபுகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.புகைப்பழக்கத்திற்கு ஆதரவாகவும் ஏதேனும் தகவல் தெரிவித்து, அது ஒன்றும் அவ்வளவு கெடுதலில்லை என்று சப்பைக்கட்டு கட்ட முயலுவார்கள். பொதுவாக புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு, சில காரணங்கள் உள்ளன.
1. அது அந்தஸ்தைக் காட்டுவதாக / துணிச்சலைக் காட்டுவதாக ஒரு தவறான எண்ணம் பலர் மத்தியில் நிலவுதல்
2. அதிகக் கவலை அல்லது மன உளைச்சலின் பொழுது, புகை பிடித்தால், புகையில் உள்ள நிகோடின் என்ற பொருள் (நச்சுப்பொருள்) இறுக்கம் மறைய உதவுகிறது. நாம் அதிக வேலைப்பளுவின் பொழுது காபி அல்லது டீ அருந்துவதும் இதே காரணத்திற்காகத்தான்.
3. தம் பெற்றோர் அல்லது மனைவியிடம் எதிர்ப்புணர்வைக்காட்டும் பொருட்டு சிலர் இப்பழக்கத்தைக் கைக்கொள்கின்றனர்.
4. புகை பிடிக்கும் நண்பர்களைத் திருப்தி செய்ய சிலர் தொடங்கி, தாமும் இவ்வலையில் வீழ்ந்து விடுகின்றனர்.
5. புகை பிடிப்பதன் மூலம், எதையோ சாதித்த திருப்தி சிலருக்குக்கிடைக்கிறது
6. சிலரோ, புகை வளையங்கள் காற்றில் கரைகையில், தமது கவலைகளும் கரைந்து விடுவது போல் உணர்வதால், தாம் புகை பிடிப்பதாக் கூறுகின்றனர்.

இவை எல்லாம் மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. புகை பிடிக்காதவர்கள் இவையெல்லாம், அசட்டுத்தனமான, வெற்றுச் சமாதானங்கள் என்பதை நன்கறிவர். உண்மையில் புகை பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

1. சிகரெட்டினால் ஏற்படும் துர்நாற்றம், புகைப்பவர்கள் உடைகள், வியர்வை எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது. புகை பிடிக்காதவர்கள், இந்த துர்நாற்றத்தின் காரணமாகவே இவர்களை விட்டு விலக நேரலாம்.
2. மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன
3. தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்தலைவலியும் தோன்றலாம்.
4. புகை பிடிக்கப் பிடிக்க, இன்னும் அதிக அளவில் தொடர்ச்சியாகப் புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் (urge) தோன்றும். இதனால், சங்கிலித்தொடர் போல புகைக்கத் தொடங்கிவிடுவர். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப் புகைக்காவிடில், உடல் சோர்வும், தலைசுற்றலும் கூட ஏற்படலாம்.
5. உதடுகளும் பற்களும் கறைபடிந்து அருவருக்கும் அளவு மாறிவிடும். விரல் நுனிகளும் சிலருக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
6. அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால், செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேக்சும் தடைபடும்.
7. நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
8. புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடித்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.
9. சளித்தொல்லை, ஆஸ்த்மா (மூச்சுக்கோளாறுகள்) உண்டாகும்.
10. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்து விடுவதால், நாளடைவில் உணவின் மீது நாட்டமானது குறையத்தொடங்கும்.
11. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
12. உடலில் நிகோடினின் அளவு அதிகரிக்கையில், சில மருந்துகள் உடலில் வினைபுரிவதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர், புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் அவர் நிலை தேறவில்லை. அப்பொழுது, ஒரு மருத்துவர் கூறிய தகவல் இது.

இவை எல்லாம் உடல் நலத்திற்கு ஏற்படும் சில கேடுகள். இவையும் தவிர, சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா? அது மட்டுமல்ல, அவர்கள், தாம் பணிபுரியும் அலுவலகத்தின் உள்ளே புகைக்க இயலாது என்பதால், அடிக்கடி, வெளியில் செல்ல வேண்டியிருக்கும். இதனால் பணிகள் தாமதமாகின்றன. மேலதிகாரிகளின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடுகிறது. ஒரு சிகரெட் புகைக்க ஐந்து நிமிடங்கள் தேவைப்படுவதாகக் கொண்டால், ஒரு நாளைக்குப் பத்து சிகரெட் பிடிப்பவர்கள், குறைந்தது ஒரு மணி நேரத்தை வீணடிக்கின்றனர். கால இழப்பு, மற்றெல்லா இழப்பையும் விடப் பெரியது. ஆமாம்தானே?

மேலும் ஒரு முக்கியமான கேடு புகை பிடிப்பதால் விளைகிறது. புகை பிடிப்பவர்களை 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) என்கிறோம். இவர்கள் புகைக்கையில் பக்கத்தில் இருக்க நேரிடுபவர்களும் அப்புகையினைச் சுவாசிக்க நேரிடுகிறது.இத்தகையவர்களை ' மறைமுகப் புகைப்பாளர்' (Passive Smokers) என்று அழைக்கிறோம். 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) பிடிக்கும் புகையால் இவர்களுக்கு, இருமல், சளித்தொல்லை, புற்றுநோய் எல்லாம் ஏற்பட எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ அதே அளவு 'Passive Smokers' ஆகிய புகைபிடிக்காத அப்பாவிகளுக்கும் உண்டு. தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் இப்பழக்கத்தை விடுவதும் அவ்வளவு எளிதானதன்று.

உண்மையில் சொல்லப் போனால், எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால், புகைப்பதை விட்டு விட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விடுவது இயலக் கூடிய ஒன்று மட்டுமல்ல, இது கண்டிப்பாகக் கைவிடவேண்டிய ஒரு தீய பழக்கம்.

1 comment:

  1. If i stop smoking immediately any side effects.. or step by step only we reduce smoking which one is safety. Pls tell me Sir..and how to face side effects pls explain breefly..

    - Mahesh

    ReplyDelete

Related Posts with Thumbnails