புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.
தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.
ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.
நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.
குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.
புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !
No comments:
Post a Comment